ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்அன்மையயில் நடைபெற்றது. அம்மாபேட்டை ஒன்றிய அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர் பேசுகையில், ``அ.தி.மு.க தொ ண்டர்கள் யார் வேண்டுமானாலும் பஞ்சாயத்து தலைவராகவோ, சேர்மனாகவோ, அமைச்சராகவோ, முதலமைச்சராகவோ கூட ஆகலாம். நான் எல்லாம் அமைச்சராவேன் என நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.
இப்படி எதையுமே எதிர்பார்க்காமல் கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களுக்குப் பதவி கொடுத்து அழகு பார்ப்பதுதான் அ.தி.மு.க. ஆனால், தி.மு.க ஒரு குடும்பக் கட்சி. அதில் அதன் உறுப்பினரான ஸ்டாலின் கனவில் இருக்கிறார். ஸ்டாலின் எப்போதும் முதலமைச்சர் ஆக முடியாது. அவருக்கு அந்த யோகம் இல்லை” என ஸ்டாலினை விமர்சித்தார். அடுத்ததாக தனது கட்சி அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரை மையமாக வைத்துப் பேசினார்.
``யாரும் கட்சிக்கு துரோகம் பண்ணக் கூடாது. கட்சிக்கு துரோகம் செய்யுறது தன்னோட குடும்பத்துக்கு துரோகம் செய்யுற மாதிரி. என்னையையே நிறைய பேரு பேசுவாங்க; திட்டுவாங்க அதையெல்லாம் நான் மறந்துடுவேன். `கருப்பணன் மாவட்டச் செயலாளராக இருந்தான். கட்சி நல்லபடியா வளர்ந்துச்சி’ன்னு நாளைக்கு 10 பேர் சொல்லணும். ஆனா, ஒரு சில எம்.எல்.ஏக்கள், (தோப்பு எம்.எல்.ஏவை மறைமுகமாகக் குறிப்பிட்டார்) தேவையில்லாமப் பேசிக்கிட்டு, ஏதேதோ செஞ்சிக்கிட்டு இருக்காங்க. அதனால, அந்த ஊர்ல கட்சி வெட்டியாப் போயிடுச்சி. நமக்கு இந்தப் பதவியை ஆண்டவன் எதுக்குக் குடுத்துருக்கான். நாம நியாயமா, நாலு பேருக்கு முடிஞ்ச அளவுக்கு உதவி செய்யணும்னுதான். இல்லைன்னா அந்தப் பாவம் நம்மளைத்தான் சேரும். நாமளே ரெண்டு மூணு பேரா போட்டி போட்டுக்கிட்டு, அண்டர்கிரவுண்டுல வேலை பார்க்குறோம். இதுமாதிரி செஞ்சதாலதான் ஒருசில இடங்கள்ல நாம வெற்றியை விட்டுட்டோம். நம்ம ஆளுங்ககிட்டயே ஒற்றுமையில்லை. ஒரு எம்.எல்.ஏவாகவோ, அமைச்சராகவோ ஆகிட்டா நான் சொல்றதைத்தான் செய்யணும், கேக்கணுங்கிற தலைக்கனம் இருக்கக் கூடாது” என்றார்.