அமெரிக்கா - இரான் இடையே போர் வெடித்தால் இந்தியா எப்படி பாதிக்கப்படும்?
அமெரிக்கா மற்றும் இரானிடையேயான பதற்றத்தினால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது இந்தியாவின் பொருளாதார நிலைமையிலும், அந்நிய செலாவணியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்நிய செலாவணி பற்றாக்குறை அதிகரித்தால், மந்தநிலை அதிகரிக்கும் என்பதோடு, உணவு, பானம் முதல் போக்குவரத்து, ரயில்வே, தனியார் போக்குவரத்து போன்றவையும் மோசமான பாதிப்பை சந்திக்கும். அதுமட்டுல்ல, வேலையின்மையும் அதிகரிக்கும்.
இவை அனைத்தும் நடந்தால், இந்தியாவின் பொருளாதார நிலை மோசமடைந்து 1973ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் மக்கள் வீதிகளில் இறங்கியதைப் போன்ற நிலைமை மீண்டும் வரும். அந்த கலகட்டத்தில் இந்தியாவின் பட்ஜெட் சீரற்றுப்போனது. கச்சா எண்ணெய் விலை ஒன்றரை டாலரிலிருந்து எட்டு டாலராக உயர்ந்தது, இது இந்தியாவின் முழு திட்டத்தையும் சிதைத்துவிட்டது.
இந்திரா காந்தியிடம் அந்நிய செலாவணி இருப்பு வெகுவாகக் குறைந்து போனது. இதே நிலைமை சந்திரசேகர் மற்றும் வி.பி.சிங் அரசாங்கத்தில் இரண்டாவது முறையாக நடந்தது.
இரான் மீது தாக்குதல் நடைபெற்று, மூன்றாவது முறையாக எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தால், இந்தியாவிற்கும் இந்தியாவின் கனவான ஐந்து டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரத்திற்கும் சிக்கல் ஏற்படும்.
இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் ஓமனைப் போல, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தன்னால் முயன்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்தியா இதுபோன்ற நாடுகளுடன் இணைந்தோ அல்லது தனியாகவோ அமெரிக்காவுடன் பேச வேண்டும். அதோடு, இரானுடனும் சமாதானம் பேச முயற்சி செய்யவேண்டும்.
வளைகுடாவில் 80 லட்சம் இந்தியர்கள் வேலை செய்வது மட்டுமல்லாது, தனது உள்நாட்டுத் தேவையில் 80 சதவீத எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது, அதிக அளவு எரிவாயுவை இந்தியா வாங்குகிறது. வளைகுடா நாடுகளுடன் 100 பில்லியனுக்கும் அதிகமான வர்த்தகம் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்ல, முதலீடுகளும் முக்கியமானவை. எனவே, இராக் அல்லது லெபனான் தொடர்பாக போர் ஏற்பட்டாலும், அது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.