சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் பரவி, மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் நேற்று மேலும் 44 பேர் கொரோனா வைரசுக்கு பலியானதையடுத்து அங்கு உயிரிழப்பு 2788 ஆக உயர்ந்துள்ளது. 78 ஆயிரத்து 824 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். நேற்று புதிதாக 327 பேர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
–தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் சீனாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் இறப்பு விகிதம் கணிசமாக குறையத் தொடங்கி உள்ளது. ஆனால், சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளில் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
ஈரானில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 245 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென் கொரியாவில் இந்த வைரசுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 256 புதிய நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர், கொரோனா தாக்கம் அதிகம் உள்ள டீகு நகரம் மற்றும் வடக்கு ஜியாங்சாங் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம், தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை 2022 ஆக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு வெளியே அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை இங்குதான் அதிகம்
சக்திபாரதி