கேரளாவில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹெல்மெட்டுக்குள் இருந்த விஷப்பாம்புடன் ஆசிரியர் ஒருவர் 11 கி.மீ தூரம் பயணித்த சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. ஹெல்மெட்டுக்குள் அந்தப் பாம்பு நசுங்கி உயிரிழந்ததால், இருசக்கர வாகனத்தில் சென்ற ஆசிரியர் உயிர் தப்பினார்.
இந்த நிலையில், பெண் ஒருவர் அணியும் ஷூவுக்குள் விஷப்பாம்பு இருந்த விவகாரம் இப்போது தெரியவந்திருக்கிறது. கண்ணூர் மாவட்டம் மாலூர் கிராமத்தில் உள்ள மசூதி அருகில் உள்ள பைதுஸபா மான்ஸில் என்ற வீட்டில் வசிக்கும் ஜசீரா என்பவரின் ஷூவில், பாம்பு இருந்துள்ளது.
ஷூவின் உள்ளே இருந்த சாக்ஸை எடுத்ததும் உள்ளே இருந்து ஏதோவொன்று அவரது கையைக் கடிக்க நீண்டு வெளியே வந்திருக்கிறது. அச்சமடைந்த அவர், கூச்சலிட்டபடி ஷூவைத் தூக்கி வீசிவிட்டார். சத்தம் கேட்டு வீட்டினர் அங்கு வந்து பார்த்தபோது, ஷூவுக்குள் இருந்து பாம்பு வெளியே வந்திருக்கிறது.
ஷூவின் உள்ளே இருந்த பாம்பு, வித்தியாசமாக இருந்திருக்கிறது. அதனால் வனத்துறையினருக்கு இதுபற்றி தகவல் அளித்துள்ளனர். பிறகுதான், அந்தப் பாம்பு ’சட்டித்தலையன்’ என்பதும் அதிக விஷத்தன்மை கொண்டது என்பதும் தெரியவந்துள்ளது. அந்த வகை பாம்பின் தலைப்பகுதி வித்தியாசமாக இருப்பதுடன், அழுத்தமாகக் கடித்து பல் மூலம் விஷத்தை உடலில் இறக்கக்கூடியதாம்.
அந்தப் பாம்பு எப்படி வீட்டுக்குள் வந்தது என்பது தெரியாமல் குழம்பிவருகிறார்கள். பிடிபட்ட பாம்பு, பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விடப்பட்டது
குறிப்பாக சட்டித்தலையன் வகை பாம்பு, ஒரேநேரத்தில் பலமுறை கடித்து விஷத்தைச் செலுத்தும் என்பதும் தெரியவந்ததால்,அக் குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
சக்திவேல்