சிஏஏ-வை ரத்து செய்யுங்கள்' - பிரதமர் மோதிக்கு கெடு விதித்த 101 வயது சுதந்திர போராட்ட வீரர்

இந்திய பிரதமர் நரேந்திர மோதி நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் கவனம் செலுத்தி ஒன்பது மாதங்களில் நிலையை சரிசெய்யாவிட்டால் சட்ட ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கப்போவதாக 101 வயது சுதந்திர போராட்ட வீரர் தெரிவித்துள்ளார்.



சுதந்திர போராட்ட வீரரான ஹெச். எஸ். துரைசாமி இதற்காக பிரதமர் மோதிக்கு ஒன்பது மாதங்கள் கெடு விதித்துள்ளார்.


துரைசாமி, பிரதமர் மோதி மற்றும் வீர் சாவர்கரை விமர்சித்த காரணத்தினால் இவரை பாஜக தலைவர்கள் சிலர் "போலி சுதந்திர போராட்ட வீரர்" என்று கூறினார்கள்.


"அதை கேட்டதும் எனக்கு சிரிப்புதான் வந்தது. அதனால் நான் சிறை சென்ற ஆவணத்தை காண்பித்தேன். அவர் (பாஜக சட்டமன்ற உறுப்பினர் பஸன்கௌடா படில்)" அப்படி கூறியது முட்டாள்தனமானது. இதனை கண்டிக்காமல், மற்றவர்கள் அவருக்கு ஆதரவு அளித்தது வியப்பாக இருக்கிறது" என்று பிபிசி இந்தி சேவையிடம் துரைசாமி தெரிவித்தார்.


பிரதமர் மோதியும் அவரது அரசாங்கமும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்பிஆர், என்ஆர்சி குறித்தே கவனம் செலுத்தி வருவதாக துரைசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.


"நாட்டில் நெருக்கடி நிலை. பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை நெருக்கடி. அதோடு விலைவாசி உயர்வும். இந்த அரசாங்கத்தின் முன் பல கேள்விகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் பதிலளிப்பதுதான் மோதியின் வேலை. இதெற்கெல்லாம் பதில் அளிக்காமல் இருப்பதால் மக்கள் விமர்சிப்பார்கள் என்ற அச்சம் மோதிக்கு உள்ளது என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர் காஷ்மீர் மற்றும் சிஏஏ என்று மக்கள் கவனத்தை திசை திருப்புகிறார்" என்று துரைசாமி தெரிவித்தார்.


கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் காந்தியவாதியான துரைசாமிக்கு அடுத்த மாதம் வந்தால் 102 வயதாகும். சிஏஏ-வை ரத்து செய்யக்கோரி மூன்று நாட்கள் நடைபெறும் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொள்ளும் அவர், சட்ட ஒத்துழையாமை இயக்கம் தொடங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.


"நாட்டில் நிலவும் பிரச்சனைகளை சரிசெய்து, ஏழ்மையை ஒழித்து, சிஏஏ-வை ரத்து செய்யாவிட்டால் நான் பிரதமர் மோதியை மக்களுக்கு எதிரானவர் என்று கூறுவேன். நான் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டேன். ஒவ்வொரு மாதமும் மக்களை திரட்டி அடுத்த ஜனவரி மாதம் இது தொடர்பான முடிவை எடுப்போம்" என்கிறார் துரைசாமி.


சிஏஏ, என்பிஆர், மற்றும் என்ஆர்சி இந்துக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாது இருப்பவர்களையும் பாதிக்கும் என்று அவர் கூறுகிறார்.


எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வரும் போது கேட்கப்படும் 5 கேள்விகளுக்கு பதில் அளிக்க மக்கள் மறுக்க வேண்டுமா?


இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்கிறார் துரைசாமி. அதே நேரத்தில் அந்த 5 கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டோம் என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள். தங்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை என்று மக்கள் கூறுவார்கள். அல்லது தங்களுக்கு பதிலளிக்க விருப்பமில்லை என்று கூறுவார்கள். பின்னர் இறுதிப்பட்டியல் வெளியிடும் போது, ஆவணங்களை சமர்பிக்காதவர்களுக்கு அரசாங்கம் நோட்டீஸ் அனுப்பும். 15 நாட்களுக்குள் தகுந்த ஆவணங்களை காண்பிக்க கெடு விதிக்கும். ஒருவேளை மக்கள் ஆவணங்களை காண்பிக்க மாட்டோம் என்று முடிவெடுத்தால், அவர்களின் பெயர்கள் நீக்கப்படும். இது ஆபத்தான முடிவு என்று அவர் கூறுகிறார்.


ப:இதற்கான தீர்வு ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் எடுக்கப்பட வேண்டும். இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.கே: அதனால் ஐந்து கேள்விகளுக்கு மக்கள் பதிலளிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா?


101 வயதிலும் போராட என்ன காரணம்?


ஏனெனில் எனக்கு இந்த நாட்டின் மீது பற்று இருக்கிறது. ஏழ்மையை ஒழிக்க வேண்டும் என்று காந்தி விரும்பினார். இந்த விவகாரத்தில் இதற்கு முன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியையும் நான் குற்றம் சொல்வேன். இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனப்படுத்திய காலத்தில் நான் காங்கிரஸில் இருந்து வெளியேறினேன். இதற்கு பிரிட்டிஷ் ஆட்சியே பரவாயில்லை என்று அவருக்கு கடிதம் எழுதினேன். அவர் அப்படியே இருந்தால் கிராமம் கிராமமாக சென்று வீடு வீடாக சென்று இந்திரா காந்தி ஒரு சர்வாதிகாரி என்று மக்களிடம் கூறுவேன் என்று சொன்னேன். அதற்காக நான் சிறையில் அடைக்கப்பட்டேன்.