2 ஆண்டுகளில் 15000 குழந்தைகள் சிகிச்சையில் இருந்தபோது உயிரிழந்துள்ளனர் காங்., கடும் விமர்சனம்

 


டெல்லி: குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சிகிச்சை பெற்று வந்த 15,013 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வந்த தகவலையடுத்து, காங்., செய்தித்தொடர்பாளர் ரன்தீ்ப் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார்.


குஜராத் சட்டசபையில் கடந்த மார்ச் 3ம் தேதி துணை முதல்வர் நிதின் பட்டேல் பேசுகையில், 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 1.06 லட்சம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதில் 15,013 குழந்தைகள் சிகிச்சையில் இருந்தபோது உயிரிழந்துள்ளனர். இந்த தகவல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு பிரிவுகள் அளித்துள்ளது, என்றார்.


இது குறித்து காங்., செய்தித்தொடர்பாளர் ரன்தீ்ப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 2 ஆண்டுகளில் 15,013 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அதாவது, ஒவ்வொரு நாளும் சராசரியாக 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ஆமதாபாத்தில் மட்டும் 4,322 குழந்தைகள். அந்த குழந்தைகளின் அழுகை சப்தம் கேட்கவில்லையா? இது தொடர்பாக யாரேனும் கேள்வி எழுப்புவார்களா?. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


சக்திபாரதி