தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 20ஆம் கட்ட விசாரணை ஒருநாள் முன்னதாக நிறைவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடா்பாக, வெள்ளிக்கிழமை நிறைவடைந்த இருந்த 20ஆம் கட்ட விசாரணை, கரோனா அபாயம் காரணமாக ஒருநாள் முன்னதாக நேற்று நிறைவடைந்தது.

 

தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே 22, 23 ஆகிய தேதிகளில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 15 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து, சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 

தூத்துக்குடி, சென்னையில் 19 கட்ட விசாரணை முடிந்த நிலையில், தூத்துக்குடி தெற்குக் கடற்கரை சாலையில் உள்ள ஆணைய அலுவலகத்தில் 20ஆம் கட்ட விசாரணை கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. 

 

20ஆம் தேதி வரை விசாரணை நடைபெறும் என்றும், இதில் ஆஜராக 44 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கரோனா அபாயம் காரணமாக இந்த விசாரணை ஒருநாள் முன்னதாக நேற்றுடன் (மாா்ச் 19) முடித்துக்கொள்ளப்பட்டது. 20ஆம் கட்ட விசாரணையின்போது சமூகநலத் துறை மற்றும் மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் 35 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 21ஆம் கட்ட விசாரணை ஏப்ரல் 2ஆவது வாரத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.