பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை; கடைகள் வழக்கம் போல் திறந்து இருக்கும்: தமிழக அரசு
பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் மளிகை கடைகள், பால் கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் மருந்தகங்களை மூடுவதற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

 

கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த நோய்கிருமியால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கரோனா வேகமாக பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கரோனா தடுப்பு நடவடிக்கை எவ்வாறு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் உள்ளே சென்று அங்கு இருந்த பயணிகளிடம் கரோனா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை கொடுத்தார்.

 

முக கவசம் அணியுமாறும், கையை நன்றாக இரண்டு, மூன்று முறை கழுவ வேண்டும் என்றும் அறிவுரை வழங்கிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எழும்பூர் ரயில் நிலையத்தில் சுத்தம் செய்யும் எந்திரத்தை பார்வையிட்டு அடிக்கடி சுத்தம் செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். சுகாதாரத்துறை சார்பில் ரயில் நிலையத்தில் 60-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர், பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்தனர். அவர்களிடம் கரோனாவை தடுப்பதற்கு எந்த மாதிரியான விழிப்புணர்வை மேற்கொண்டு வருகின்றீர்கள் என்பது குறித்து அமைச்சர் கேட்டார்.

 

அமைச்சருடன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திர பாபு உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.ஆய்வின் போதே அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கரோனா பாதிப்பு உள்ளது’ என்று கூறி இருந்தார். இந்த நிலையில் ஆய்வு முடிந்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு இன்னும் தீவிரப்படுத்தி உள்ளது. முதல்-அமைச்சர் வழங்கிய அறிவுரையின்படி அரசின் எல்லா துறைகளும் ஒருங்கிணைந்து பரிசோதனை பணியில் தீவிரம் காட்டி உள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருவோரும், வெளிமாநிலங் களில் இருந்து வருவோரும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 750 பேருக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் சோதனை செய்து இருக்கிறோம். 

 

வீட்டு கண்காணிப்பில் 2,984 பேர் இருக்கிறார்கள் கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பெரிய கடைகளை அடைக்கும்படி கூறி இருக்கிறோம். ஆனால் சிறிய கடைகளை திறந்து வைக்கும் படி உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் மளிகை கடைகள், பால் கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் மருந்தகங்களை மூடுவதற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த கடைகள் வழக்கம் போல் திறந்து இருக்கும். கோயம்பேடு காய்கனி அங்காடியை மூடுவதற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. கடைகள் மூடப்படும் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கோ.பிரகாஷ் கூறினார்.முன்னதாக சென்னை மாநகர பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.