தூத்துக்குடி மக்களுக்கு என்ன செய்ய போகிறார் கனிமொழி ?

தூத்துக்குடி சென்னைக்கு கூடுதல் ரயில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதற்கு கனிமொழி எம்பி., யின் நடவடிக்கை என்ன ? என எதிர்பார்ப்பில் உள்ளனர். 

 

தமிழகத்தில் வளர்ந்து வரும் தொழில்நகரமான தூத்துக்குடியில் அடிப்படை வசதிகள் இன்னமும் மேம்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலை வசதி, கால்வாய் வசதிகள் இன்று வரை நகராட்சியாக இருந்த போது எப்படி இருந்ததோ அவ்வாறே தான் உள்ளன. இது ஒரு புறமிருக்க பேருந்து கட்டணங்கள் அதிகமாக இருக்கும் நிலையில் அதற்கு மாற்றாக வெளியூர்களுக்கு செல்ல ரயில்களையே பொதுமக்கள் நாடுகின்றனர். ஆனால் தூத்துக்குடியிலிருந்து தலைநகரான சென்னைக்கு இரவு ஒரேஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. 

 

அதிலும் பெரும்பாலான நேரங்களில் அதிக கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் பேருந்து கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்களின் அடுத்த தேர்வாக ரயில் தான் உள்ளது. ஆம்னி பேருந்துகளில் சென்னை செல்ல ரூ. 1200 வரை கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். விசேஷ நாட்கள் என்றால் ரூ. 1500 லிருந்து 2000 வரை கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் தெரிவித்தனர். அப்படியிருக்க சென்னைக்கு கண்டிப்பாக கூடுதல் ரயில் தேவை என்பதே நிசர்சனம். 

 

முன்பு மீட்டர்கேஜ் ரயில்பாதை இருந்த பாேதே தூத்துக்குடியிலிருந்து மதியம், இரவு நேரங்களில் 2 ரயில்கள் சென்னைக்கு இயக்கப்பட்டது. ஆனால் பிராட்கேஜ் ரயில்பாதையாக மாற்றிய பின்னர் இரவு 8 மணிக்கு ஒரேஒரு ரயில் மட்டுமே ( முத்துநகர் எக்ஸ்பிரஸ்) இயக்கப்படுகிறது.  இதனால் ரயில்களில் இடம் கிடைக்காமல் பயணிகள் அல்லாடும் நிலையே தற்போது வரை தொடர்கிறது. ஜெயதுரை, எம்பியாக இருந்த போது அவரது  முயற்சியால் குருவாயூர் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயில், மற்றும் கோயமுத்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றை பெற்று தந்தார்.

 

மேலும் தூத்துக்குடி ரயில் நிலையத்திலும் முறையான கேன்டீன் வசதி, குடிநீர் வசதி, புக் ஸ்டால் போன்றவை கிடையாது என பயணிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தாகத்திற்கு குடிக்க கூட தண்ணீரின்றி பயணிகள் தவிக்கின்றனர். தூத்துக்குடி தொகுதிக்கு கனிமொழி எம்பியாக இருப்பதால் விஐபி தொகுதியாக உள்ளது. எனவே கனிமொழி எம்பி., இந்த விஷயத்தில் உடனே தலையிட்டு தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து தொகுதி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.