தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான மனு தாக்கல் நாளை துவங்குகிறது.

சென்னை : தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான மனு தாக்கல் நாளை துவங்குகிறது. அ.தி.மு.க.வில் வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிக்கிறது. அ.தி.மு.க.வை சேர்ந்த சசிகலா, புஷ்பா, செல்வராஜ், முத்து கருப்பன், விஜிலா சத்தியானந்த்; தி.மு.க.வை சேர்ந்த திருச்சி சிவா; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.கே.ரங்கராஜன் ஆகியோரின் ராஜ்யசபா எம்.பி. பதவி காலம் ஏப். 2ல் நிறைவடைகிறது.

அதையொட்டி புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்காக மார்ச் 26ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை துவங்குகிறது; மார்ச் 13 வரை மனு தாக்கல் செய்யலாம். ஞாயிற்றுக் கிழமை 8ம் தேதி மட்டும் மனு தாக்கல் கிடையாது. தினமும் காலை 11:00 மணியில் இருந்து மாலை 3:00 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலரான சட்டசபை செயலர் சீனிவாசன் அல்லது தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் மனு தாக்கல் செய்யலாம். மார்ச் 16ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை வாபஸ் பெற மார்ச் 18ம் தேதி கடைசி நாள். போட்டி இருந்தால் மார்ச் 26ம் தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு அன்று மாலை முடிவு அறிவிக்கப்படும்.

தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. சார்பில் தலா மூன்று எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். தி.மு.க. சார்பில் திருச்சி சிவா அந்தியூர் செல்வராஜ் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணி கட்சியான தே.மு.தி.க. தரப்பில் ஒரு எம்.பி. பதவி கேட்டு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் த.மா.கா. தலைவர் வாசன் ஆகியோரும் 'சீட்' கேட்டு உள்ளனர். அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் எம்.பி.க்கள் என பலரும் வாய்ப்பு கேட்டு தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். எனவே வேட்பாளர்களை முடிவு செய்ய முடியாமல் கட்சி தலைமை திணறி வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.



சக்திபாரதி