அலகாபாத்: உத்தர பிரதேசத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில், பொது சொத்துக்களை சேதப்படுத்திய நபர்களின் விவரங்கள் அடங்கிய பேனர்கள், முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டது. இதனை உடனே அகற்ற, யோகி ஆதித்யநாத் அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, கடந்த டிசம்பரில், இங்கு நடந்த போராட்டத்தில், வன்முறைகள் அரங்கேறின. 1.55 கோடி ரூபாய் மதிப்பிலான பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அந்த வன்முறைகளில் ஈடுபட்ட, 57 பேரின் புகைப்படங்கள், பெயர்கள் மற்றும் முகவரிகள் அடங்கிய பேனர்கள், மாநில தலைநகர் லக்னோவில் உள்ள பிரதான சாலைகளில் வைக்கப்பட்டன. இதனை கடுமையாக கண்டித்துள்ள அலகாபாத் ஐகோர்ட், பேனர்களை உடனடியாக அகற்ற, உ.பி., அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பேனர் வைத்தது மக்களின் அந்தரங்கத்தில் தலையிடுவதற்கு சமம். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய அரசியல் சாசனம் 21ன் கீழ், உ.பி., அரசு விதிமீறலில் ஈடபட்டுள்ளது. பேனரை உடனே அகற்ற வேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, லக்னோ மேஜிஸ்ட்ரேட் மற்றும் லக்னோ கமிஷனர், மார்ச் 16ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது
சக்திபாரதி