திவால் நிலைக்கு செல்லும் நிறுவனங்களின் பிரச்னையை விரைந்து தீர்வு காணும்., திவால் சட்ட மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது

 


டெல்லி:.


திவால் நிலைக்கு செல்லும் நிறுவனங்களின் பிரச்னைக்கு, விரைந்து தீர்வு காணும் திவால் சட்டம், 2016ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்குப் பின், மூன்று முறை, இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.


இந்நிலையில், திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்களின் மீதான குற்ற நடவடிக்கைகளில் இருந்து, அந்நிறுவனத்தை வாங்கும் புதிய நிர்வாகிகளை காக்கவும், இது தொடர்பாக, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்கும் வகையிலும், திவால் சட்டத்தில் மீண்டும் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில், 6ம் தேதி நிறைவேறியது.


இந்நிலையில், இந்த சட்ட திருத்த மசோதாவை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார். அப்போது, குரல் ஓட்டெடுப்பு மூலம், இந்த சட்ட திருத்தம் நிறைவேறியது.


இது குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராஜ்யசபாவில் கூறியதாவது: புதிய சட்டத்தில், மத்திய அரசு ஏன் இத்தனை முறை திருத்தம் மேற்கொள்கிறது என, பல எம்.பி.,க்கள் சந்தேகத்தை எழுப்புகின்றனர். இந்த சட்டத்தை மேலும் செம்மைப்படுத்தவும், காலப் போக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பவும், இந்த சட்டத்தில் திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இது தொடர்பாக, துறை வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து, பொறுப்புடனே இந்த திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.



சக்திபாரதி