புரோக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வட்டாட்சியர் அலுவலகம் : பொதுமக்கள் அலைக்கழிப்பு

புரோக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வட்டாட்சியர் அலுவலகம் : பொதுமக்கள் அலைக்கழிப்பு




தூத்துக்குடி வட்டாாட்சியர் அலுவலகத்தில் புரோக்கர்களின் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சாதாரண பொதுமக்களின் மனுக்களை அலட்சியப்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மாவட்டஆட்சியர் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தூத்துக்குடி மேலசண்முகபுரத்தை சேர்ந்தவர் ஆதிலிங்கராஜன் முருகேசன் (55). இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் வாரிசு சான்றிதழில் பெயர் திருத்துவதற்காக தாலுகா அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் மனு கொடுத்துள்ளார். இன்று வரை அவருக்கு பெயர் திருத்தம் செய்த சான்றிதழ் கிடைக்கவில்லை. இவர் மனு அளித்ததிலிருந்து தற்போது வரை 3 தாசில்தார்கள் மாறியும் சான்றிதழ் கிடைக்காமல் மன வேதனையில் உள்ளார். 

 

இது குறித்து ஆதிலிங்கராஜன் முருகேசன் நமது செய்தியாளரிடம் கூறும் போது, தூத்துக்குடியில் நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனது தந்தை திருப்புகழ் நாடார் இறந்ததால் அவரது வாரிசுகளாகிய நாங்கள் வாரிசு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்ற 2018ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி தூத்துக்குடி வட்டாாட்சியர் அலுவலகத்தில் மனு செய்தோம். மனு செய்ததிலிருந்து 6 மாத காலமாக தூத்துக்குடி தாலுகா அலுவலகத்திற்கு சான்றிதழ் வேண்டி நடையாய் நடந்தேன். சான்றிதழ் கிடைக்கவில்லை. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் நீங்கள் அளித்திருந்த மனு தொலைந்து விட்டது என அலட்சியமாக பதில் தெரிவித்து என்னை அலுவலகத்திலிருந்து வெளியே செல்லுமாறு மிரட்டினார்கள் . அப்போதிருந்த தாசில்தார் சிவகாமி சுந்தரியிடம் முறையிட்டேன். அதற்கு அவர் புதிதாக மனு செய்யுமாறு கேட்டு கொண்டார். 

 

இதனால் மறுபடி புதிதாக திருத்தம் செய்வற்கான மனுவை விஏஓ மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு பல நாட்கள் அலைந்து கையெழுத்து பெற்று மறுபடியும் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்திற்கு நடையாய் நடந்தேன். தற்போது அந்த சான்றிதழ் தூத்துக்குடி சார்ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் கையிலிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த விஷயத்தில் தூத்துக்குடி மாவட்டஆட்சியர் சந்திப்நந்தூரி தலையிட்டு உடனே எனக்கு சான்றிதழ் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்றார். 

 

புரோக்கர்களுக்கு முக்கியத்துவம்

 

தூத்துக்குடி தாலூகா அலுவலகம் இடம் மாறியும் குணம் மாறாமலே உள்ளது. புரோக்கர்கள் கொண்டு வரும் மனுக்களின் மீது அதிவேகமாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், பொதுமக்களின் மனுக்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அடிக்கடி சான்றிதழ் நிலவரம் குறித்து கேட்டால் உங்கள் மனு தொலைந்து விட்டது என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுகின்றனர். 

 

தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமே கீழ்நிலை அலுவலர்கள், பொதுமக்களின் கோரிக்கைகளை தட்டி கழிப்பதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.எனவே மாவட்டஆட்சியர் இந்த விஷயத்தில் தலையிட்டு பொது மக்களுக்கு உடனுக்குடன் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.