ராஜ்யசபா சீட்.. வாசனை வைத்து அதிமுக கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்.. கொந்தளிப்பில் தேமுதிக
சென்னை: மாநிலங்களவை தேர்தலில், கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், ஜி.கே.வாசனுக்கு அதிமுக வாய்ப்பு வழங்கியுள்ள நிலையில், தேமுதிகவுக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா மிகவும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில், காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கு கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பேரும் ராஜ்யசபா செல்வது உறுதியாகிவிட்டது. அதேநேரம், மற்றொரு கூட்டணி கட்சியான, தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் தரவில்லை. ஏற்கனவே பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாசுக்கு, அதிமுக ராஜ்யசபா சீட் கொடுத்தது, இப்போது தமிழ் மாநில காங்கிரசுக்கும் சீட் கொடுத்துள்ளது. ஆனால், அதிமுக கூட்டணியில், பெரிய கட்சிகளில் ஒன்று தேமுதிக. அக்கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.