மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் ரத்து: ஆட்சியர் அறிவிப்பு
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 31ம் தேதி வரை மக்கள் குறைதீர்வு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுவிட்டது. அரசு அலுவலகங்கள், கோவில், மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்கள் கைகழுவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் நடக்கும் மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம், வெள்ளிக்கிழமைதோறும் நடக்கும் அம்மாதிட்ட முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராமப் பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மற்றும் அம்மா திட்ட முகாம்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் போன்றவை கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக 31.03.2020 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
பொது மக்கள் அவசரமான கோரிக்கை மனுக்கள் குறித்த விவரங்களை collrtut@nic.in எனும் இணையத்தள முகவரியில் அல்லது Call Your Collector Whats App Number 8680800900 எனும் அல்லது 0461 - 2340101 என்ற தொலைபேசியிலோ தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.